
திருப்பதி நகரத்தின் கபிலதீர்த்தம் சாலையில் இன்று காலை சைக்கோ மனநிலையுடன் கூடிய ஒருவர் கத்தியுடன் நடத்திய தாக்குதலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்த நிலையில், சேகர் (வயது 55) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கபிலதீர்த்தம் பகுதியில் வாகன நிறுத்துமிட பணியாளராக பணிபுரிந்து வந்த சுப்பிரமணியம் மற்றும் அப்பகுதியில் வசித்து வரும் கல்பனா ஆகியோர் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கத்தி மற்றும் தடியுடன் தாக்குதல் நடத்திய அந்த நபர், தடுப்பேதும் இல்லாமல் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் பயங்கர அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார். சம்பவத்துக்குப் பின்னர், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஒருமணி நேரத்திற்கும் மேலாக அவரை தேடி சிக்கவைக்க முயற்சித்தனர். இறுதியாக வலை வீசி பிடித்த போலீசார், அந்த நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் எனவும், அவர் சைக்கோ மனநிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அலிப்பிரி காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலுக்கான முழுமையான பின்னணி, அவரது மனநிலை, ஏற்கனவே எதாவது குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறாரா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. திருப்பதி பகுதி பொதுமக்கள், இப்படியான அசாதாரண தாக்குதலால் கடும் பதற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.