விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் பல்வேறு மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒரே நாளில் அ.தி.மு.க.வில் இணைந்திருப்பது ஆளும் தரப்புக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (நவ. 18) நடைபெற்ற நிகழ்வில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது. விலகிச் சென்றவர்களில் தி.மு.க. ஐ.டி. விங் அமைப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குக் குறைந்த காலமே உள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் ஆளும் தி.மு.க. மற்றும் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் நூற்றுக்கணக்கில் விலகி அ.தி.மு.க.வில் இணைந்து வருவது, அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடர் கட்சித் தாவல்கள், ஆளுங்கட்சியின் மீதான அதிருப்தியின் வெளிப்பாடாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.