திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சைபர் குற்றவாளிகள் திருமண தகவல் மையம் என்ற பெயரில் போலியான கணக்குகளை உருவாக்குகின்றனர். அந்த தளங்களில் திருமண வரன்கள் தேடும் நபர்களை குறி வைத்து அவர்களுடன் நம்பிக்கையாக பேசுகின்றனர். அதன் பிறகு அவர்களை போலியான முதலீட்டு தளங்களில் அதிகமான தொகையை முதலீடு செய்ய வைக்கின்றனர்.

கடந்த 2024, 2025-ஆம் ஆண்டுகளில் திருமண வரன் தேடும் தளங்கள் மூலமாக 379 புகார்கள் பதிவாகி உள்ளது. எனவே பொதுமக்கள் ஆன்லைனில் சந்திக்கும் நபர்களின் பின்னணியை சரிபார்க்க வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரையும் நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். அதிக வருமானம் தருவதாக உறுதி அளித்தாலும் எச்சரிக்கை மிகவும் அவசியம். அந்நியர்களுடன் வாட்ஸ் அப், பிற மெசேஜ் மூலம் தனிப்பட்ட நிதி தகவல்களை பகிர வேண்டாம். இது போன்ற மோசடி நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டால் 1930 என்ற சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி என்னை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அப்படி இல்லை என்றால் www.cybercrime gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.