பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள துர்லக் கிராமத்தில், விஜய் குமார் ராம் என்பவர் சந்தேகத்திற்கிடமான சூழலில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 22ஆம் தேதி, தனது மனைவி சரிதாவை சந்திக்க அவர் மாமியார் வீட்டிற்குச் சென்றார். ஆனால், மே 26ஆம் தேதி அவர் இறந்து விட்டதாக  தகவல் குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. இது இயல்பான மரணம் அல்ல, திட்டமிட்ட கொலை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, இறந்தவரின் சகோதரர் ஷிவ் குமார் ராம் கூறியதாவது, “சரிதாவை 2010ஆம் ஆண்டு என் சகோதர் திருமணம் செய்தார். திருமணமான சில நாட்களிலேயே அவரும் அவரது குடும்பத்தினரும் பணத்திற்காக துன்புறுத்தத் தொடங்கினார்கள். ‘நீங்க பணம் கொடுத்தா தான் திரும்பி வருவேன்’ என மனைவி கூறியதால், என் சகோதர் தனது நிலத்தை விற்று ரூ.4 லட்சம் ஏற்பாடு செய்தார். பின்னர் மாமியார் வீட்டிற்குச் சென்று இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். அதன்பிறகு அவர் மரணம் அடைந்ததாகத் தகவல் வந்தது” என்றார்.

இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விஜய்யின் மனைவி சரிதா குமாரி, மைத்துனர் ராகுல் குமார், குந்தன் ராம், சந்திரிகா ராம் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.  முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சரிதா குமாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், மற்ற மூன்று பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இது பற்றி பீகார் போலீஸ் அதிகாரி எஸ்.எச்.ஓ. நிரஞ்சன் குமார் கூறியதாவது, “இது ஒரு சந்தேகத்திற்கிடமான மரணம் அல்ல, திட்டமிட்ட கொலை என தெரியவந்துள்ளது. முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதால், அவர்களை கைது செய்ய விசாரணை நடந்து வருகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.