
தெலுங்கானா மாநிலத்தை உலுக்கிய அப்ஸரா கொலை வழக்கில் தற்போது கோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு ஹைதராபாத் அருகே சரூர் நகர் பகுதியை சேர்ந்த குருகந்தி அப்சரா என்ற 30 வயது பெண் டிவி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். இவர் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு தினசரி செல்வதை வாடிக்கையாக வைத்திருந்த நிலையில் அந்தக் கோவிலில் பூசாரியாக இருந்த சாய் கிருஷ்ணா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதில் ஏற்கனவே 36 வயதான சாய் கிருஷ்ணாவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் அப்சராவுடன் நெருங்கி பழகி வந்தார். ஒரு கட்டத்தில் அப்சரா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கோயம்புத்தூர் செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் அவரை ஏர்போர்ட்டில் கொண்டு விடுவதாக கூறி சாய் கிருஷ்ணா காரில் அழைத்து சென்றுள்ளார்.
ஆனால் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அப்சராவை அவர் அடித்து கொலை செய்தார். பின்னர் அந்த காரில் சடலத்தை இரண்டு நாட்களாக வைத்திருந்த அவர் தன் வீட்டின் அருகே உள்ள ஒரு அரசு அலுவலகத்தின் செப்டிக் டேங்கில் சடலத்தை வீசிவிட்டார். பின்னர் ஊருக்கு சென்ற அப்சரா மீண்டும் திரும்பி வரவில்லை என்று சாய் கிருஷ்ணா நாடகம் ஆடியதோடு தன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக அந்த பெண்ணின் தாயாரோடு சென்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.
ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளிவந்தது. இந்த வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கொலையாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு 9.75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு கோரி தீர்ப்பு வழங்கியுள்ளது.