ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாவர் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சென்றார். இந்த மாணவியை 9 பேர் கொண்ட மர்ம கும்பல் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதன்பின் மாணவி வீட்டிற்கு திரும்பிய நிலையில் மறுநாள் அதாவது புதன்கிழமை பெற்றோருக்கு மாணவி வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால் அதற்கு அடுத்த நாள் கடந்த வியாழக்கிழமை மாணவிக்கு பள்ளியில் தேர்வு நடைபெற இருந்ததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் மாணவியின் தேர்வு பாதிக்கப்படும் என்பதால் பெற்றோர் புகார் கொடுக்கவில்லை.

மாணவியின் எதிர்காலத்தை கருதி வியாழக்கிழமை தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு அனுப்பிய நிலையில் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் 9 பேரும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்ததால் அவர்களை உடனடியாக கைது செய்தனர்.

இதில் ஒருவர் சிறுவன் என்பதால் அவனை கூர்நோக்கி இல்லத்தில் அடைத்த நிலையில் மற்றவர்களை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.