நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், திருச்சியில் இன்று (நவம்பர் 15) செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வி மற்றும் தமிழக அரசியல் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதற்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் (SIR) ஒரு முக்கியக் காரணம் என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “காமராஜர் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி அழிந்துவிட்டது. தற்போது அது ஒரு அரசியல் கட்சி அல்ல; வெறும் நிறுவனம் போலத்தான் செயல்படுகிறது” என்று கடுமையாகச் சாடினார்.
மேலும், தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகளின் தோள் மீது ஏறித்தான் காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற தேசியக் கட்சிகள் தங்களது அரசியல் பயணத்தைத் தொடர்கின்றன என்றும் சீமான் குற்றஞ்சாட்டினார்.
