2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், தனித்து ஆட்சியமைக்கப் பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இதனைத் தொடர்ந்து மே 10ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
முதற்கட்டமாக 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், மே 21 அன்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் உட்பட 23 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
ஆரம்பத்தில் விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தருவதாகக் கூறியிருந்தாலும், தவெகவின் விருப்பத்தை ஏற்று அமைச்சரவையில் இணையச் சம்மதித்தன. இதன் தொடர்ச்சியாக, மே 22 அன்று ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ ஷாஜகான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
இதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆளுங்கட்சி அமைச்சரவையில் இணைந்து புதிய அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
இது குறித்துப் பேசிய ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத கூட்டணி அமைச்சரவை மரபைத் தவெக தொடங்கியுள்ளதாகவும், விஜய் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளார் என்றும் பாராட்டியுள்ளார். இந்த மரபு வருங்காலத்திலும் தொடரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதால் திமுகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என்று தாங்கள் சொல்லவில்லை என்றும், அடுத்த தேர்தல் காலத்தில் தங்களின் இறுதி முடிவை அறிவிப்போம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
