தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், மிகவும் உருக்கமாகவும் அதே சமயம் அதிரடியாகவும் பல கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “இன்றைக்கு நாம் ஆட்சியை இழந்துவிடவில்லை, நம்முடைய தயவில்தான் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்பது உங்களுக்குப் புரியும்” என்று தற்போதைய அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் வெற்றி தோல்விகள் சகஜம் என்றும், தனிமனிதர்களை விட இந்த இயக்கம்தான் எப்போதுமே பெரியது என்றும் தொண்டர்களுக்குத் தேறுதல் கூறியுள்ளார்.

​தொடர்ந்து பேசிய அவர், தனது தனிப்பட்ட தோல்வியை விட கழகத்தின் தோல்விக்காகவே தான் அதிகம் வருத்தப்படுவதாகவும், தான் தோற்று கழகம் ஜெயித்திருந்தால் கூட மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். திமுகவால் தொடர்ந்து இரண்டு முறை வென்று ஆட்சிப் பொறுப்பேற்க முடியாது என்ற வரலாற்றை இந்த முறை மாற்றிக் காட்ட வேண்டும் என்று உறக்கமில்லாமல் உழைத்தும், அது நடக்காமல் போனதுதான் தனக்கு இருக்கும் ஒரே வருத்தம் என்றும், ஸ்டாலின் என்பது வெறும் முகம்தான், இந்த இயக்கத்தின் உண்மையான இதயமும் ரத்த ஓட்டமும் தொண்டர்கள்தான் என்றும் உணர்ச்சிப் பெருக்குடன் பேசியுள்ளார்.