தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று  மகளிர் தினத்திற்கு வாழ்த்து சொன்ன போது நேரடியாக திமுகவின் பெயரை குறிப்பிட்டு விமர்சித்தார். அதாவது தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறிவிட்ட நிலையில் எப்படி மகளிர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாட முடியும் என்றார். அதன் பிறகு இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் என்றார். இதற்கு தற்போது தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆதரவு கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தம்பி விஜயை நான் பாராட்டுகிறேன். அவர் முதல் முறையாக திமுகவின் பெயரை வெளிப்படையாக சொல்லி அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இதைத்தான் நாங்களும் சொல்லி வருகிறோம். பாஜகவின் ஒரே நோக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது மட்டும்தான். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது. இதை நான் இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையிலும் தெரிவித்திருந்தேன் என்று கூறினார். மேலும் நாங்கள் தொடங்கியுள்ள மும்மொழி கல்வி கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றும் கூறினார்.