விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கோவை ஏர்போர்ட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டிற்கு கலங்கத்தை ஏற்படுத்திய செயல்தான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு. இதுபோன்ற கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் கூட நடக்கக்கூடாது.

அந்த அளவிற்கு இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு என்னுடைய பாராட்டுகள். இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களோ என்ற அச்சம் இருந்த நிலையில் அரசு தரப்பு வக்கீல்கள் உறுதியாக நின்று வாதாடியுள்ளனர். இதனை நான் பாராட்டுகிறேன். இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு மட்டுமின்றி மனிதநேயம் உள்ள அனைவருக்கும் ஒரு பெரும் காயத்திற்கு ஏற்பட்ட மருந்தாக இருக்கிறது.

இந்த வழக்கின் தீர்ப்புக்கு விசிக, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் உரிமைக்கு வருவது நியாயமல்ல. இந்த வழக்கில் சாட்சிகள் வலுவாக இருந்ததோடு செல்போன் மற்றும் சமூக வலைதள வீடியோக்கள் போன்றவைகள் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக அவர்களால் தப்பிக்க முடியவில்லை.

சமூகத்தில் யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நீதி என்பது கிடைக்க வேண்டுமென்றார். மேலும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தங்களால் தான் நீதி கிடைத்தது என போட்டி போடும் நிலையில் தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் இருவருமே உரிமை கோருவது நியாயம் அல்ல என கூறியுள்ளது கவனிக்கத்தக்க விஷயமாக மாறி உள்ளது.