
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, விஜயின் தொடக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது. திமுக ஆட்சியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என ஒவ்வொருத்தரும் கேள்வி எழுப்பி உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி திமுகவுக்கு எதிராக பேசும் நிலையில் அவர் சொன்னதைத்தான் தற்போது விஜயும் பேசியுள்ளார். அதிமுகவின் வேலையை விஜய் செய்கிறார் என்று சொல்லாதீர்கள்.
அதிமுக செய்ற வேலையைத்தான் விஜய் செய்கிறார். அதிமுகவின் இடத்தை விஜய் எடுத்துக் கொள்ளவில்லை. யாருடைய இடத்தையும் யாரும் எடுக்க முடியாது. திமுகவில் உள்ள 50 சதவீத இளைஞர்கள் விஜயின் ரசிகர்கள். அதனால் குத்துது குடையுது என்கிறார்கள். மேலும் உதயநிதி கூட இன்னும் படங்களில் நடித்திருக்கலாம் என்று திமுக நிர்வாகிகளே கருத்து தெரிவிக்கிறார்கள் என்றார்.
மேலும் முன்னதாக நடிகர் விஜயின் முதல் மாநாடு கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில் சங்கர் படம் போன்ற மிகப் பிரமாண்டமாக அமைந்துள்ளதாக மாநாடு பற்றி செல்லூர் ராஜு கருத்து தெரிவித்தார். அதோடு தேர்தலில் கூட்டணி தொடர்பாக அந்த நேரத்தில் தான் முடிவெடுக்கப்படும் என்றும் திமுகவை விஜய் நேரடியாக விமர்சித்து பேசினார் என்றும் கூறினார்.
அதோடு திமுகவில் உள்ள இளைஞர்கள் 50 சதவீதம் பேர் விஜயின் ரசிகர்கள் என்பதால் திமுகவின் ஓட்டுகள் இனி தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்லலாம் என்று செல்லூர் ராஜு மறைமுகமாக பேசியது போன்று தெரிகிறது. அதே சமயத்தில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் உதயநிதி கூட இன்னும் நிறைய படங்களில் நடித்திருந்தால் அவருக்கும் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருப்பார்கள் என்று செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.