அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலூரில் நடைபெற்ற பரப்புரையில் உரையாற்றியபோது, “எந்த போராட்டங்களிலும், மக்கள் பிரச்சினைகளிலும் கலந்து கொள்ளாமல், நேரடியாக அரசியலுக்குள் வந்து இன்று தமிழகத்தின் துணை முதல்வராக இருப்பது உதயநிதி ஸ்டாலின்” என்று கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து அவர், “துரைமுருகன் போன்றவர் மிசா சட்டத்தின் கீழ் சிறை தண்டனை அனுபவித்தவர். உண்மையான போராட்ட வீரர். ஆனால் அவருக்கு ஏன் உயர்ந்த பதவி வழங்கப்படவில்லை? இன்று அவர் திமுகவில் இருப்பதால் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அதே துரைமுருகன் அதிமுகவில் இருந்திருந்தால், இன்று மாநில அரசின் முக்கிய பதவியில் இருந்திருப்பார்” என்றும் குற்றஞ்சாட்டினார்.
ஏற்கனவே, உதயநிதியின் திடீர் உயர்வை எதிர்த்து அதிமுக தொடர்ந்து விமர்சித்து வருவதோடு, மக்கள் நலனுக்காக போராடிய தலைவர்களை புறக்கணித்து, குடும்ப அரசியலை மட்டுமே முன்னிறுத்துவதாக திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி பல்வேறு கூட்டங்களில் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
