ராமதாதாபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த முருகனுக்கும், பரமக்குடி அருகே ஆவரேந்தல் பகுதியைச் சேர்ந்த பாண்டிச்செல்விக்கும் (29) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில், முருகன் தினமும் குடித்துவிட்டு, மது போதையில் மனைவி பாண்டிச்செல்வியிடம் சண்டை இடுவது, தவறுதலாக பேசுவது என பிரச்னை செய்வது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், வழக்கம்போல் முருகன் குடித்துவிட்டு நேற்று இரவும் தகராறு செய்துள்ளார். அதனால், பாண்டிச்செல்வி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், பாண்டிச்செல்வியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, பாண்டிச்செல்வியின் ஒரு வயது பெண் குழந்தை தாயைக் காணாமல், பசியில் தாய்ப்பாலுக்காக ஏங்கி அழும் காட்சி காண்போரை கண்கலங்கவைத்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுவுக்கு அடிமையானதால் ஒரு குடும்பமே சீரழிந்து ஒரு பாவமும் அறியா குழந்தைகள் தவித்து வருவது …. சோகத்தின் உச்சக்கட்டமே…

மேலும், சந்தேக மரணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பரமக்குடி காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.