உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண் குழந்தைகள் மட்டும் இன்றி ஆண் குழந்தைகளுக்கு கூட பாலியல் தொந்தரவுகள் இருக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில் தற்போது ஐநா சபை ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றகளில் ஈடுபடுபவர்கள் தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களாகவே பெரும்பாலாக இருக்கிறார்கள். உலகம் முழுவதும் கடந்த 2023 ஆம் ஆண்டு தினசரி 40 பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் துணையினால் கொல்லப்பட்டதாக ஐநா சபை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

ஒரு நாளைக்கு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் என 40 பேர் தெரிந்தவர்களால் கொல்லப்பட்டது என்பது அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. கடந்த 25ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்பட்டது. அந்த தினத்தை முன்னிட்டு இந்த அறிக்கையை ஐநாவின் போதைப் பொருள்கள் குற்ற செயல்கள் தடுப்பு அமைப்பு (UNODC) வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் உலக அளவில் சராசரியாக 51,100 பெண்கள் மற்றும் குழந்தைகளின் மரணத்திற்கு அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் தெரிந்தவர்கள் காரணமாக அமைந்துள்ளனர். அப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு 140 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது ஒரு நிமிடத்திற்கு ஒருவர் என்ற கணக்கிலும் வருகிறது. இதேபோன்று கடந்த 2022 ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் என 48,800 பேர் தங்களுடைய துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை கடந்த வருடம் அதிகரித்துள்ளது. உலக அளவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் பிரச்சனைகளால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக உலகிலேயே பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஆபத்தான இடம் வீடுதான் என்று ஐநா சபை தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் ஆப்பிரிக்கா உள்ளது. அங்கு கடந்த வருடம் தங்களுடைய துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் என கிட்டத்தட்ட பாலியல் வன்கொடுமை போன்ற பல்வேறு குற்ற செயல்கள் மூலம் 21700 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதே போன்று அமெரிக்காவில் ஒரு லட்சம் பெண்களில் 1.6 சதவீதம் பெண்களும், ஆசியாவில் ஒரு லட்சம் பேருக்கு 0.8 பேரும், ஐரோப்பாவில் ஒரு லட்சம் பெண்களில் 0.6 சதவீதம் பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் குழந்தைகளும் அடங்குவார்கள். கடந்த வருடம் குடும்பத்துக்குள் நடந்த கொடிய வன்முறை சம்பவத்தில் பெண்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது போன்ற குற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் வழக்கத்திற்கு மாறாக குற்ற செயல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று ஐநா கவலை தெரிவித்துள்ளது.