தமிழக அரசியலில் எடப்பாடி – சி.வி.சண்முகம் மோதல் ஒருபுறம் அதிமுகவை உலுக்கி வரும் நிலையில், மறுபுறம் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) நிலைகுலைந்து போயுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து 11 இடங்களில் போட்டியிட்ட அமமுக, மன்னார்குடியில் காமராஜ் வெற்றி பெற்றதன் மூலம் ஒரே ஒரு இடத்தை மட்டுமே பிடித்தது. ஆனால், வெற்றி பெற்ற காமராஜோ சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாகத் திரும்பி டிடிவி தினகரனுக்கே ‘நோஸ் கட்’ கொடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த தினகரன் அவரை கட்சியிலிருந்து நீக்கினாலும், அதன் தொடர்ச்சியாக தற்போது கட்சி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்து வருவது அவருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ஒன்றியம் முதல் ஊராட்சி வரை பொறுப்பில் இருந்த 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிரடியாக விலகியிருப்பது அமமுக கூடாரத்தையே அதிர வைத்துள்ளது.
“அதிமுகவை எடப்பாடியிடமிருந்து மீட்போம் என்று சொல்லிவிட்டு, அவருடனேயே கூட்டணி வைப்பதா?” என திருச்சி செந்தில்நாதன் கொதித்துப் போய் வெளியேற, திருவாரூர் லக்கி நாசர், யானை காலித் என அடுத்தடுத்து முக்கியப் புள்ளிகள் தினகரனுக்குப் பெரிய கும்பிடு போட்டுவிட்டு நடையைக் கட்டியுள்ளனர்.
ராமநாதபுரம் முன்னாள் எம்.எல்.ஏ முருகனும் பதவியை உதறியுள்ள நிலையில், தனது சமுதாய வாக்குகள் அதிகம் உள்ள இடங்களிலேயே நிர்வாகிகள் விரக்தியில் விலகுவது தினகரனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எஸ்பி வேலுமணி தரப்பிலிருந்து “அதிமுக ஒன்றிணைய வேண்டும்” என்ற குரல் வலுத்து வரும் சூழலில், தனது பலத்தை இழந்து வரும் டிடிவி தினகரன், கட்சியைத் தக்கவைக்க அடுத்து என்ன அதிரடி எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எகிறியுள்ளது.
