தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரலில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சியான திமுக வலுவான கூட்டணியுடன் களம் காணத் தயாராகும் சூழலில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் அக்கட்சிக்குத் தற்போதே தலைவலியை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன.
கடந்த 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்ற அகில இந்திய கட்சியான காங்கிரஸ், வரவிருக்கும் தேர்தலில் 40 தொகுதிகள் கேட்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் புதிதாகக் களம் காணும் நிலையில், காங்கிரஸின் இந்தக் கூடுதல் கோரிக்கை திமுக தலைமையைத் திருப்தியடைய செய்யவில்லை. மேலும், கூட்டணியில் புதிதாக மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளதாலும், கொங்கு இளைஞர் பேரவை இணைய முயற்சிப்பதாலும், மற்ற கூட்டணிக் கட்சிகள் எத்தனை தொகுதிகள் கேட்டு வருவார்களோ என்று திமுக தலைமை மனக்கணக்குப் போட்டு வருகிறது.
இதனால், தொகுதிப் பங்கீடு முடிந்து, தொகுதிகள் அடையாளம் காணும் வரை திமுகவுக்குத் தலைவலி நீடிக்கும் சூழ்நிலையே காணப்படுகிறது.
