சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பெண் வழக்கறிஞர் ரோஜா (32), குளியலறை தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர், கடந்த 15-ஆம் தேதி இரவு தனது நண்பர் யஸ்வந்துடன் ஓட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். மறுநாள் காலையில் நண்பர் கதவைத் தட்டியும் திறக்கப்படாததால், ஓட்டல் நிர்வாகம் மற்றும் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரோஜா குளியல் தொட்டியில் ஆடைகளின்றி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடல் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த ரோஜா அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததாகவும், போதையில் குளிக்கச் சென்றபோது குளியல் தொட்டியில் நிலைதடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தைப் போலவே இது அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட போலீசார், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உண்மை நிலை தெரியவரும் எனத் தெரிவித்துள்ளனர். திருமணமான ரோஜா, கணவரைப் பிரிந்து சென்னையில் பயிற்சி வழக்கறிஞராக இருந்து வந்துள்ளார்.
சமூக வலைதளம் மூலம் பழகிய நண்பருடன் ஓட்டலுக்கு வந்த நிலையில் நேர்ந்த இந்த உயிரிழப்பு குறித்து தேனாம்பேட்டை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
