நாகை: தமிழக வெற்றி கழகம் கட்சி தலைவர் விஜய், நாகையில் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்பே திரண்டிருந்தனர்.

பரப்புரை இடத்தை  அணுக முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் பெரிதாக இருந்த வேளையில், திடீரென ஒரு ஆம்புலன்ஸ் கூட்டத்திற்குள் நுழைந்தது சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக் கவனித்த உடனேயே தவெக தொண்டர்கள் ஆம்புலன்ஸுக்கு இடம் வழங்கி, விரைவாக செல்ல உதவியதைக் காண முடிந்தது.

இதுபோலவே, விஜய் தனது முதல் அரசியல் பரப்புரையை கடந்த மாதம் திருச்சியில் மேற்கொண்டபோதும், இதே மாதிரியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அப்போதும் மக்கள் கூட்டத்தைக் கடந்து ஆம்புலன்ஸ் செல்லும் வகையில் வழிவிட்டு உதவியிருந்தனர்.

இந்த நிகழ்வுகள், விஜய் கூட்டங்களில் ஏற்படும் ஒழுங்கும், தொண்டர்களின் பொறுப்புணர்வும் தெளிவாக காட்டுகின்றன. மருத்துவ அவசரங்களை புரிந்து கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்த தவெக தொண்டர்களின் செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுக்குரியதாகப் பதிவாகி வருகின்றது.