
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். சென்ட்ரிங் வேலை பார்க்கும் அசோக் குமார் மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை தான் வீட்டிற்கு வருவார். இந்த நிலையில் சுகன்யா விற்கும் அதே பகுதியில் வசிக்கும் சத்தியமூர்த்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர்.
இதனை அறிந்த அசோக் குமார் தனது மனைவியையும் சத்தியமூர்த்தியையும் கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சுகன்யா தனது குழந்தைகளுடன் பிக்கனஅள்ளியில் இருக்கும் தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இதேபோல அசோக் குமாரும் பெங்களூரில் இருந்து மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். நவம்பர் ஒன்றாம் தேதி தீபாவளி முன்னிட்டு நடைபெற்ற நடன நிகழ்ச்சியை பார்ப்பதற்காக குடும்பத்தினர் சென்றனர்.
அப்போது சத்தியமூர்த்தி அசோக் குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனியாக ஒரு விஷயம் பேச வேண்டும் என அழைத்துள்ளார். அதனை நம்பி அசோக் குமார் சென்றுள்ளார். அப்போது சத்தியமூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அசோக்குமாரின் வயிறு கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அசோக் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.