
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சுபாஷ்-சந்தியா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கல்யாணி என்ற 3 வயது மகள் இருந்துள்ளார். இதில் குழந்தை கல்யாணி அங்கன்வாடி மையத்திற்கு தினசரி செல்வார். அந்த வகையில் நேற்று முன்தினம் அங்கன்வாடி மையத்திற்கு சென்ற தன் குழந்தையை சந்தியா வீட்டிற்கு அழைத்து வந்தார்.
அப்போது திடீரென குழந்தை மாயமாகிவிட்டதாக கூறி சந்தியா போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குழந்தையை தேடிவந்த நிலையில் சந்தியாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் சந்தேகம் கொண்டு சந்தியாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் போது குழந்தையை ஒரு ஆற்றின் அருகே விட்டு வந்ததாக அவர் கூறினார். இதனால் குழந்தை ஆற்றுக்குள் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிறுமியை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டது. சுமார் 8 மணி நேர தேடுதலுக்கு பிறகு சிறுமியின் சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.
அதன்பின் சந்தியாவிடம் விசாரணை நடத்தியதில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அதனால் தான் கோபத்தை குழந்தையை ஆற்றில் வீசி கொலை செய்ததாகவும் கூறினார்.
இருப்பினும் குழந்தையை அவர் கொலை செய்ததற்கான முழுமையான காரணம் தெரிய வராத நிலையில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.