உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள காளி கோவிலில், பெண் பக்தர் ஒருவர் தனது நாக்கைத் துண்டித்து காணிக்கையாகச் செலுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தியார் மொஹாலியாவில் உள்ள புகழ்பெற்ற இந்தக் கோவிலுக்கு வழிபட வந்த பவன் சுங்கியைச் சேர்ந்த உஷா என்ற பெண், பூஜையின் போது திடீரெனத் தனது நாக்கை வெட்டி தேவியின் பாதத்தில் சமர்ப்பித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்த அந்தப் பெண்ணைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற பக்தர்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த  போலீசார், அவரை மீட்டு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கோவிலில் இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல என்பதுதான் இன்னும் அதிரவைக்கும் விஷயமாக உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ஒரு மாணவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதும், அதற்கு முன்பும் பலர் நாக்கை அறுத்து காணிக்கை கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோவில் வளாகம் 24 மணி நேரமும் காவல்துறை பாதுகாப்பில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், மீண்டும் மீண்டும் இதுபோன்ற விபரீதங்கள் நடப்பது பாதுகாப்புப் பணியில் உள்ள குளறுபடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தெய்வத்தின் பெயரால் நிகழும் இந்த மூடநம்பிக்கை செயல்கள் குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.