பீகார் மாநிலம் கட்டிகார் மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில் 15 மற்றும் 16 வயதுடைய சிறுவன் மற்றும் சிறுமி காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் இருவரும் சோளக்காட்டில் தனியாக இருந்ததைப் பார்த்த கிராம மக்கள், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தாலிபான் முறையிலான தண்டனையை அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
இருவரையும் ஒரு கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கிய கும்பல், சிறுவனுக்குப் பாதியாகத் தலைமுடியை மழித்து (மொட்டை அடித்து) அசிங்கப்படுத்தியது.
அதுமட்டுமின்றி, ஊர் மக்கள் முன்னிலையில் சிறுவனை வைத்து அந்தச் சிறுமிக்குக் கட்டாயமாகச் சிந்துரம் இடச் செய்து வலுக்கட்டாயமாகத் திருமணமும் செய்து வைத்துள்ளனர்.
இந்த நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துத் தகவல் அறிந்த போலீஸார், வீடியோவில் இருக்கும் நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு சிறுவயது ஜோடிக்கு ஊர் மக்கள் ஒன்றுகூடி இவ்வளவு பெரிய கொடுமையை இழைத்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
