
ஹரியானா மாநிலம் கைதாலில் நடந்து மனதை கலங்கவைத்த சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது . கடந்த மே 21ஆம் தேதி, கைதாலில் உள்ள ராடூர் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற 15 வயது சிறுமி ஒருவர், லாரி மோதியதில் உயிரிழந்ததாக முதலில் பதிவு செய்யப்பட்டது. போலீசார் இந்த மரணத்தை வழக்கமான சாலை விபத்தாக கருதி, அடையாளம் தெரியாத லாரி ஓட்டுநரின் மீது வழக்குப் பதிந்தனர். ஆனால் தொடர்ந்து நடந்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
தொடர்ந்த நடத்திய தீவிர விசாரணையின்போது, சிறுமியின் தாய் தான் தனது காதலனுடன் சேர்ந்து தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது தெரியவந்தது. மேலும், இந்த கொலையை விபத்து போல காட்டுவதற்காக சிறுமியின் உடலை சாலையில் வீசி, லாரி மூலம் மோத வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மரணத்தின் போது, சிறுமிக்கு அதிக அளவில் போதைப்பொருள் கொடுக்கப்பட்டதால்தான் சிறுமி இறந்ததாக தாய் விசாரணையில் கூறினார். இந்த உண்மை சிறுமி உடலை வீட்டிற்கு கொண்டு வந்து இறுதி சடங்குகளைச் செய்து கொண்டிருந்த போது, தாய் தனது கணவரை தனியாக அழைத்துச் சென்று முழு உண்மையையும், கணவரிடம் அழுதபடி ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் நடவடிக்கையை தீவிரமாக எடுத்தனர். சிறுமியின் தந்தையின் புகாரின் பேரில், அவரது மனைவி, காதலன் லாடி, லாடியின் சகோதரர் ரஞ்சித், தோழி ரேகா, டாக்டர் ராஜேஷ், லாரி ஓட்டுநர் ரஞ்சித் சர்தார் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் மித்து ஆகியோரையும் கைது செய்தனர்.
இவர்களுக்கு எதிராக கொலை, போக்சோ சட்டம், பாலியல் வன்கொடுமை, மற்றும் பிற இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிந்து, விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் இந்த வழக்கை முழுமையாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது