விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுப்பதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை போன்ற அமைப்புகளைத் தொடர்ந்து, தற்போது தணிக்கை வாரியத்தையும் மத்திய அரசு தனது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாகச் சாடியுள்ளார்.

ஒரு திரைப்படம் என்பது பல கோடி முதலீடு மற்றும் கலைஞர்களின் உழைப்பில் உருவாவதாகும்; அதனை அரசியல் காரணங்களுக்காக முடக்குவது படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், இது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தணிக்கை வாரியத்தில் உறுப்பினராகப் பணியாற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ள அவர், இன்றைய டிஜிட்டல் மற்றும் சமூக வலைதள யுகத்தில் தணிக்கை வாரியம் என்பது ஒரு காலாவதியான அமைப்பாகிவிட்டதாகக் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் தணிக்கை செய்யப்படாத எத்தனையோ காணொளிகள் எளிதாகக் கிடைக்கும் நிலையில், திரைப்படங்களுக்கு மட்டும் தணிக்கை செய்வது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதே நிதர்சனம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆபாசம் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட படங்களுக்குத் தடை விதிக்காத தணிக்கை வாரியம், அரசியல் காரணங்களுக்காகச் சான்றிதழை மறுப்பதை ஏற்க முடியாது என்றும், அந்த வாரியம் கலைக்கப்பட வேண்டும் என்றும் ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.