கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். “எங்கள் தலைவர் விஜய், தனது திரையுலக வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கும்போதே அதைத் துறந்துவிட்டு மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளார். அவர் ஒரு திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அடுத்த ஒரு மணி நேரத்திலேயே பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும்; அந்த அளவுக்குச் செல்வாக்கு இருந்தும் அதைத் தூக்கியெறிந்துவிட்டு வந்தவர்” எனப் பெருமிதத்துடன் பேசினார்.
மேலும், திமுக அரசை “கையாலாகாத அரசு” என்று விமர்சித்த அவர், மக்களின் வரிப்பணத்தில் செய்யும் பணிகளுக்குத் தம்பட்டம் அடித்துக் கொள்வதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார். “விஜய் முதலமைச்சராவது உறுதி; அவரது ஆட்சியில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு இருக்கும். கடலூர் மாவட்டத்தின் 9 தொகுதிகளையும் தவெக கைப்பற்றும்” என முழங்கிய அவர், தொண்டர்கள் அனைவரும் ‘விசில்’ சின்னத்தை வீடு வீடாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இக்கூட்டத்தில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
