டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இந்தியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில், அங்கிருந்து வெளிவந்துள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தில் உள்ள ஒரு குளிர்பானக் கடையில் (Thums Up stall), ஊழியர் ஒருவர் கண்ணாடி டம்ளர்களில் மீதமிருக்கும் குளிர்பானத்தை மீண்டும் பாட்டில்களில் ஊற்றி நிரப்பும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.



அடுத்த போட்டிகளுக்கு வரும் ரசிகர்களுக்கு இந்த பழைய குளிர்பானத்தைத்தான் வழங்குவார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், “பாருங்கள், இதுதான் மிகப்பெரிய மோசடி” என்று அந்த வீடியோவைப் பகிர்ந்தவர் பதிவிட்டுள்ளார். சுகாதாரமற்ற முறையில் நடைபெறும் இந்தச் செயலால் ரசிகர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.