ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்தில் உள்ள வூரபிண்டா நகரத்தில் குழந்தைகள் ஒரு இறந்து போன பாம்பைப் பயன்படுத்தி ஸ்கிப்பிங்  விளையாடிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பலரின் கடும் கண்டனத்தையும் அதிர்ச்சியையும் எழுப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்த விசாரணையை குவீன்ஸ்லாந்து சுற்றுச்சூழல், சுற்றுலா, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். “இந்தச் செயலை கடுமையாகக் கண்டிக்கிறோம், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று துறையின் பேச்சாளர் உறுதி செய்துள்ளார். மேலும், பாதுகாக்கப்பட்ட இனமான பிளாக்-ஹெடெட் பைத்தானைப் (Black-headed python) சேதப்படுத்தினால், குற்றவாளிக்கு 12,615 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 11.8 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இது தொடர்பாக பலரும் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். “இது நான் இவ்வளவு நாட்களாக பார்த்த மிக வினோதமான விஷயம்,” என்று ஒருவர் கூற, மற்றொருவர், “இது பல்வேறு விதங்களில் தவறான செயல்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சிலர் இந்த பாம்பு உயிருடன் இருந்ததா, அல்லது குழந்தைகள் தாமாகவே அதை கொன்றார்களா என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். “நிச்சயமாக இவர்களே அதை கொன்றிருக்க வேண்டும்” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளர், மற்றொருவர் “இது ஏற்க முடியாத செயல்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.