
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கலையரசன். இவர் மெட்ராஸ், வாழை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது இவர் ட்ரெண்டிங் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வீடியோ நேற்று வெளியானது. இந்நிலையில் நடிகர் கலையரசன் அளித்துள்ள ஒரு பேட்டி தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது திறமையான நடிகராக இருந்த போதிலும் கலையரசனுக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை. இதற்கு காரணம் இயக்குனர் பா. ரஞ்சித்துடன் தான் நெருக்கமாக இருப்பதால்தான் என்று கூறியுள்ளார். இது பற்றி நடிகர் கலையரசன் பேட்டியில் கூறியதாவது, சினிமாவில் ஜாதி இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் அது அப்பட்டமாக இருக்கிறது.
நான் இயக்குனர் ரஞ்சித்துடன் நெருக்கமாக இருப்பதால் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதோடு சிலர் என்னை அழைப்பதற்கே தயங்குகிறார்கள். ஆனால் நான் இதைப் பற்றி கவலைப்படுவது கிடையாது. என்னுடைய வேலையை எப்போதும் திறம்பட செய்வேன். இயக்குனர் ரஞ்சித் குறிப்பிட்ட நபர்களை மட்டும் படங்களில் நடிக்க வைப்பது கிடையாது. அவருடன் பல நடிகர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
ஆனால் சிலர் ஜாதி இல்லை என்று கூறிவிட்டு அவர்களுக்கு நெருக்கமானவர்களுடன் மட்டும் பழகும் நிலையில் சிலர் என்னை அழைத்து ரஞ்சித்துடன் பழக வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் ரஞ்சித்தின் எண்ணம் எனக்கு தெரியும் என்பதால் நான் சினிமாவை கடந்து அவரை மதிக்கிறேன். இதை எனக்கு அவர் வாய்ப்பு கொடுக்கிறார் என்பதற்காக நான் சொல்லவில்லை. மற்றவர்கள் என்னை அழைக்கா விட்டாலும் ரஞ்சித் மீதான மரியாதை மட்டும் ஒருபோதும் குறையாது என்பதற்காகத்தான் சொன்னேன் என்றார்.
மேலும் நடிகர் கலையரசன் தமிழ் சினிமாவில் ஜாதி இருப்பதாக கூறியது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.