கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அரசு மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், மாநிலத்தில் ஒரு பெரிய மாற்றம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், ஈரோடு மற்றும் கரூர் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சமைத்த உணவைப் பரிமாறத் தடை விதித்த சம்பவங்கள் மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும், சமூக நீதி பேசுபவர்கள் இதைக் கவனிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துக் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் பெரும் சுமையைச் சுமப்பதாகக் கூறிய அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தமிழைப் போற்றுவதாகக் கூறும் தி.மு.க அரசு, ஆசிரியர் தேர்வுகளில் தனது சாதனைகளைக் கேள்விகளாகக் கேட்டுப் பாரபட்சம் காட்டுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார். இறுதியாக, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் போற்றுபவர்களை “சங்கி” என்று விமர்சிக்கும் போக்கையும் அவர் கடுமையாகச் சாடினார்.
