கிருஷ்ணகிரியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபு என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக பாஜக குற்றம் சாட்டியது‌. அதன் பிறகு தமிழக அரசுக்கு எதிராக முன்னாள் ராணுவ வீரர்களை போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்திருந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்ட நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் கர்ணன் பாண்டியனும் கலந்து கொண்டார்.

இவர் பாஜக கட்சியின் நிர்வாகி ஆவார். இந்தப் போராட்டத்தின் போது கர்னல் பாண்டியன் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவர் பேசியதாவது, உலகிலேயே ஒழுக்கமான ஆர்மி இந்தியன் ஆர்மி தான். அப்படிப்பட்ட ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நல்லது கிடையாது. இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றாக சுடவும் குண்டு வைக்கவும் தெரியும். ஆனால் நாங்கள் அதை ஒருபோதும் செய்ய மாட்டோம். எங்களை சீண்டி பார்த்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று கூறினார். இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அவர்களையும் கர்ணல் பாண்டியன் விமர்சித்தார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவிய நிலையில் கர்னல் பாண்டியன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.

அப்போது பத்திரிக்கையாளர்கள் கர்னல் பாண்டியனிடம் நீங்கள் ஏன் ஒரு அரசியல்வாதியை போல் நடந்து கொள்கிறீர்கள். இப்படி தமிழ்நாட்டுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கலாமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த கர்ணல் பாண்டியன், நான் மிரட்டவில்லை. எச்சரிக்கை விடுகிறேன். தமிழகத்தில் இப்படி சட்டம் ஒழுங்கு நிலை தொடர்ந்து இருந்தால் நிச்சயமாக குண்டு வைப்போம் என்று கூறினார். இந்நிலையில் கர்ணல் பாண்டியன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மீது காவல்துறையினர் தற்போது 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். மேலும் கர்னல் பாண்டியனின் பேச்சு இறையாண்மை மற்றும் பொது அமைதிக்கு எதிரானது என குற்றச்சாட்டுகள் வந்ததன் காரணமாக 2 வழக்குகள் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.