சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களை திமுக அரசு வஞ்சிக்கின்றது. மூன்றாவதாக மாணவர்கள் ஒரு மொழியை படிக்க வேண்டும் என்பதுதான் புதிய தேசிய கொள்கை ஆகும். தமிழகத்தில் ஆங்கிலம் எத்தனை பேருக்கு தெரியும்? நாமக்கல் அருகே இருக்கின்ற ஒரு கிராமத்தில் சென்று ஆங்கிலத்தில் பேசினால் யாருக்குமே ஆங்கிலம் தெரியாது. அதனால்தான் மும்மொழி கொள்கை வேண்டும் என்று நாங்கள் சொல்கின்றோம்.

முன்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். வளர்ச்சியை நோக்கி உள்ள இளைஞர்களை பின்னோக்கி இழுக்க வேண்டாம். தேசிய கல்விக் கொள்கையானது நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு தொடக்க கல்வியை அவர்களின் தாய் மொழிகளில் பயிற்றுவிக்க ஊக்குவிக்கின்றது. இது மாணவர்களின் உலகளாவிய அறிவை வளர்க்க நிச்சயம் உதவும். மூன்றாவது மொழி இந்தி கிடையாது, அது எந்த ஒரு இந்திய மொழியாகவும் இருக்கலாம். குறிப்பிட்ட மொழியை தான் படிக்க வேண்டும் என்று மத்திய அரசு எந்த ஒரு சூழலிலும் கட்டாயப்படுத்தவில்லை என்று எல். முருகன் தெரிவித்துள்ளார்.