
தமிழகத்தில் அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போஸ்டர் அடித்து வருகிறார்கள். அதாவது அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தால் தன் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை கூறிய நிலையில் அண்ணாமலையின் தலைமையை அதிமுகவும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தேசிய தலைமை அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரனை புதிய மாநில தலைவராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டி வருகிறார்கள்.
அந்த போஸ்டர்களில் அண்ணாமலை மீண்டும் தலைவராக வேண்டும் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில் வேண்டும் வேண்டும் அண்ணாமலை வேண்டும். இந்தியாவிற்கு நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு அண்ணாமலை. வேண்டாம் வேண்டாம் அதிமுக கூட்டணி வேண்டாம். மேலும் தமிழகத்தில் மீண்டும் பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வோம் என்று ஒட்டப்பட்டுள்ளது.