தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான திரு. எம்.எம்.ராஜேந்திரன் அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்..

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான திரு எம். எம். ராஜேந்திரன் அவர்கள் மறைவெய்தினார் என்று அறிந்து மிகவும் வருந்துகிறேன். 1957 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான திரு. ராஜேந்திரன் அவர்கள் உதவி ஆட்சியர், துணை ஆட்சியர் போன்ற பொறுப்புகளை வகித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தவர்.

அந்தச் சமயத்தில் 1964-ஆம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டவர். அந்த அனுபவத்தைக் கொண்டு பின்னாளில் 1999 -ஆம் ஆண்டு ஒடிசா மாநில ஆளுநராக இருந்தபோது அங்கு நிகழ்ந்த புயலை எதிர்கொள்வதிலும் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி முக்கிய பங்களிப்பை ஆற்றியுள்ளார்.

தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்த போது தலைமைச் செயலாளரான திரு. ராஜேந்திரன் அவர்கள் 1989- ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சரான பின்னும் அப்பதவியில் தொடர்ந்து நீடித்து பணியாற்றினார். அரசு நிர்வாகத்திலும், அரசியலமைப்பு பதவிகளிலும் சிறப்பாகவும் நிர்வாக திறனோடும் ஆக்கபூர்வமாகவும் செயல்பட்டவர் திரு ராஜேந்திரன் அவர்கள்.

அவரை இழந்து தவிக்கும் அவரது துணைவியாருக்கும், உறவினர்களுக்கும், அவருடன் பணியாற்றிய இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.