மகாராஷ்டிராவில் மராத்தி மொழி பேச மறுப்பவர்களை கன்னத்தில் அறைய வேண்டும் என கூறிய நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, தனது கடுமையான உரையால் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய அவர், “எங்கள் மும்பையில் மராத்தி பேச முடியாது என்று சொல்வோரை கன்னத்தில் அறைய வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த மொழி இருக்கிறது, அது மதிக்கப்பட வேண்டும். மராத்தியர்களின் மரியாதைக்காக மொழி அடையாளம் அவசியம்,” எனக் கூறினார்.

மேலும், மராத்தி மொழி பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய, மாநிலம் முழுவதும் உள்ள வங்கி மற்றும் நிறுவனங்களை கண்காணிக்க கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்திய ராஜ் தாக்கரே, “தமிழ்நாட்டை பாருங்கள், தமிழர்கள் இந்தி திணிப்பை தைரியமாக எதிர்க்கிறார்கள். கேரளாவிலும் மொழி அடையாளம் பாதுகாக்கப்படுகிறது. அதுபோல மராட்டியர்களும் மராத்திக்காக உறுதியாக நிலைக்க வேண்டும்” என வலியுறுத்தினார். சாதி, மத அடிப்படையிலான பிரிவினைகளை உருவாக்கி, மராத்தியர்களை பிரித்து விட சில அரசியல் தலைவர்கள் திட்டமிட்டு செயல் படுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் வெளியான ‘சாவா’ திரைப்படம் மற்றும் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என வந்த கோரிக்கைகள், அதன் பின்னணியில் உருவான நாக்பூர் கலவரம் ஆகியவற்றை குறிப்பிட்ட ராஜ் தாக்கரே, “மராத்தியர்களால் தோற்கடிக்கப்பட்டவர்களின் கட்டமைப்புகளை நாங்கள் அழிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதை உலகம் அறிய வேண்டும். வரலாற்றை வாட்ஸ்அப் வாயிலாகக் கற்றுக்கொள்ள முடியாது; புத்தகங்களை படிக்க வேண்டும்,” எனக் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதால் 2000 கோடி கல்விக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.