தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு குறித்த தகவல்கள் சமீப காலமாக வெளியாகி கொண்டிருக்கிறது. இதனால் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு எங்கு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அளவில் நிகழ்கிறது. அந்த வகையில் தற்போது சேலத்தில் அக்கட்சியின் முதல் மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதற்காக சேலத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 3 இடங்களில் பார்வையிட்டுள்ளார். அதாவது நேற்று முன்தினம் சேலத்திற்கு சென்ற புஸ்ஸி ஆனந்த் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாழிக்கல்பட்டி, ஆத்தூர் மற்றும் தலைவாசல் ஆகிய பகுதிகளை பார்வையிட்டார். அப்போது சேலம் மாவட்ட தலைவர் பார்த்திபன் உட்பட சில நிர்வாகிகள் அவருடன் இருந்தனர். மேலும் முன்னதாக மதுரை அல்லது திருச்சி ஆகிய மாவட்டங்களில் மாநாடு நடைபெறும் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது சேலத்தில் நடைபெறுவதற்கு அதிக அளவில் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.