
தமிழகத்தில் ஜனவரி இறுதி வாரத்தில் இருந்து பிப்ரவரி முதல் வாரம் வரை பெய்த மழையின் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கனமழையால் பாதிப்படைந்த பயிர்கள் சேதம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்த பிறகு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி கனமழை பாதிப்பால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதகளின் விவரங்கள் வருவாய் துறை மற்றும் வேளாண்மை துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும். அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களில் ஏற்பட்ட இழப்பீடுகளுக்கு பேரிடர் மேலாண்மை விதிப்படி 33 சதவீதம் இழப்பீடும், அதற்கு மேல் இழப்பீடு ஏற்பட்டிருந்தால் 20,000 ரூபாயும் வழங்கப்படும்.
நெல் பயிர்கள் தரிசில் விதைக்கப்பட்ட இளம் பயிர் வகைகளுக்கு 3000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். உளுந்து பயிர்களுக்கு கனமழையால் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் 50 சதவீதம் மானியத்தில் மீண்டும் விதை வழங்கப்படும். கனமழை பாதிப்பால் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் அறுவடையை உடனடியாக மேற்கொள்ள 50 சதவீதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு விடப்படும். மேலும் மழையினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டு இருப்பின் மீண்டும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.