தமிழக அரசியல் வரலாற்றில் 2006-ல் தேமுதிக, 2016-ல் நாம் தமிழர் கட்சி என புதிய வரவுகள் தடம் பதித்த வரிசையில், 2026 சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முறைப்படி களம் காண்கிறது. பல்வேறு யூகங்களுக்கு இடையே, தவெக தனித்துப் போட்டியிடும் என்பதை அக்கட்சியின் தலைவர் விஜய் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி நிலவும் சூழல் உருவானது. இதனை 3 முனைப் போட்டியாக மாற்றும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டியது. அதிமுக – பாஜக கூட்டணியில் தவெக-வை இணைக்க திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

பாஜக தரப்பில் தவெக-வுக்கு 60 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தவெக தரப்பில் “முதல் 2.5 ஆண்டுகள் விஜய் தான் முதலமைச்சர்” என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனை பாஜக பரிசீலித்தாலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

கடந்த 14-ம் தேதி கரூர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றிருந்த விஜய் மற்றும் அவரது நிர்வாகிகளிடம், பாஜக மேலிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது. “தனித்துப் போட்டியிட்டால் அது திமுக-வின் வெற்றிக்கு சாதகமாகிவிடும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

இருப்பினும், நேற்று மாலை பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், தொண்டர்களின் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். “சட்டசபை தேர்தலில் நாம் தனித்தே போட்டியிடப் போகிறோம். நம்பிக்கையோடு களப்பணியாற்றுங்கள், வெற்றி நமதே” என அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தவெக ஏற்கனவே 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்துள்ள நிலையில், மீதமுள்ள 174 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேடல் தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையில் முக்கிய நிர்வாகிகள் போட்டியிடும் உத்தேச தொகுதிகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி விஜய் – பெரம்பூர், ஆதவ் அர்ஜூனா – வில்லிவாக்கம், புஸ்ஸி ஆனந்த் – தி.நகர், ராஜ்மோகன் – எழும்பூர், அருள் பிரகாசம் – சைதாப்பேட்டை, மரிய வில்சன் – ஆர்.கே. நகர், செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம்.

விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள விஜய், தேர்தல் அறிக்கையையும் வேட்பாளர் பட்டியலையும் ஒரே நேரத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார். 4 முனைப் போட்டி உறுதியாகியுள்ளதால், வரும் தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசமே வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.