திராவிட கழக தலைவர் கீ. வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அவருக்கு அரசியலமைப்பு சட்டத்தில் எந்தவித உரிமையும் கிடையாது. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள அம்பேத்கர், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா, திராவிடம் போன்ற வார்த்தைகளை தவிர்த்து விட்டு தனித்து உரையாற்றி இருப்பது கண்டனத்திற்குரியது. தேசிய கீதம் ஒலிக்கப்படுவதற்கு முன்பாகவே சபையை விட்டு வெளியேறியுள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு ஆளுநர் இப்படி நடந்து கொண்டிருக்கிறார். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தமிழக ஆளுநராக நடந்து கொள்வதில்லை. ஆர்எஸ்எஸ் காரரா நடந்து கொள்கிறார். ஆர்எஸ்எஸ் கொள்கைகளை தமிழகத்தில் பரப்ப நினைக்கிறார். எனவே மத்திய அரசு உடனடியாக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும். மேலும் மத்திய அரசு தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு மாநில அரசுகளை அடக்க நினைக்கிறது என்று கூறியுள்ளார்.