சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் 99-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் அவருடைய திருவுருவ சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக ஆளுநருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அரசியல் சட்டப்படி ஆளுநர் உரையாற்றிய போது அவரை அவமதித்துள்ளனர். ஒரு ஆளுநரை அவமதிப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிப்பது போன்றதாகும். திமுக ஆளுநரை பொய் பேச வைக்க முயற்சி செய்கிறது.

ஆளுநரை வைத்துக் கொண்டே கண்டன தீர்மானம் நிறைவேற்ற முயற்சி செய்துள்ளனர். அதனால் தான் ஆளுநர் வெளியேறினார். எனவே அரசியல் சாசன சட்டப்படி சட்டசபையில் முடக்கி வைக்க வேண்டும். தமிழக அரசை கலைப்பதற்கு ஆளுநர் முயற்சி செய்ய வேண்டும். திருப்பூரில் உள்ள பழைய பேருந்து நிலையத்திற்கு கலைஞரின் பெயரை சூட்டியதற்கு நாங்கள் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார். மேலும் தமிழக ஆளுநருக்கு ஆளும் கட்சிக்கும் இடையே ஏற்கனவே பனிப்போர் நடைபெற்று வரும் நிலையில், அரசை கலைக்க ஆளுநர் முயற்சி செய்ய வேண்டும் என அர்ஜுன் சம்பத் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.