
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) தொடர்பாக, 2024-2025 நிதியாண்டுக்கான கணக்கு தாட்கள் ஜூலை 7ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, அரசு ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சிபிஎஸ் திட்டம், தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டமாக அமலில் உள்ளது. பழைய பென்சன் திட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன், பல்வேறு சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றமின்றி தொடர்ந்துவருகிறது.
தற்போதைய சூழலில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத் தாட்கள் வெளியிடப்படுவது, ஊழியர்களுக்கு பங்களிப்பு விவரங்களை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கின்றது.
https://cps.tn.gov.in/public மற்றும் www.karuvoolam.tn.gov.in ஆகிய இணையதளங்களில் ஊழியர்கள் தங்களுடைய கணக்குத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. மேலும், ‘களஞ்சியம்’ செயலி மூலமாகவும், சம்பளம், விடுப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து நிதிச் சேவைகளையும் பெற முடியும் என்பதை அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்த ‘களஞ்சியம்’ செயலி 2025 ஜனவரி 1 முதல் முழுமையாக செயல்பாட்டில் வந்துள்ள நிலையில், தற்போது CPS கணக்குத் தாட்கள் வெளியீடு மூலமாக அதன் பயன்பாடு மேலும் விரிவடைகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பங்களிப்புகள், வட்டி கணக்கீடு உள்ளிட்ட தகவல்களை நேரடியாக அறிந்து கொள்ள இந்த நடவடிக்கை உதவிகரமாக அமையும்.