இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றும் அனைத்து குடும்பங்களையும் சென்றடைந்துள்ளது. பலனடையாத குடும்பமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு திமுக ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த தகவலை அண்மையில் வெளிவந்த கருத்துக்கணிப்புகள் உணர்த்துகின்றன.

அந்த கருத்துக்கணிப்பில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் கூட 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி தான் வெல்லும் என்றும் கூறப்படுகின்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 47 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த திமுக கூட்டணி 52 சதவீதம் வாக்குகளை பெறும் என்றும், அதிமுக 23 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறையும் எனவும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. முதல்வருடைய ஆட்சிக்கு ஆதரவு தான் உள்ளது. திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவு அலைதான் வீசுகின்றது. எதிர்ப்பு அலை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

திராவிட மாடல் நாயகர் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிலர் தான் ஏதாவது ஒரு சம்பவத்தை குத்தி காட்டி அதனை தெரியப்படுத்தி ஆட்சியை குறை கூறுகிறார்களே  தவிர தமிழக மக்கள் இந்த ஆட்சியில் ஏதாவது ஒரு திட்டத்தினால் பயனடைந்து மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள், இதற்கு முந்தைய ஆட்சியில் எந்த விதமான ஒரு பயனும் கிடைக்காத மாணவ மாணவிகள் திராவிட மாடல் ஆட்சியில் பயனடைந்து வருகிறார்கள் என்பதை யாரும் உணரவில்லை. இளைஞர்கள் அனைவரும் வரவேற்கக் கூடிய ஆட்சியாக தான் திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் உள்ளது என அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.