தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, நமக்கு நாமே திட்டம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்நிலையில் தமிழக முழுவதும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் காலை 11 மணிக்கு அனைத்து ஊராட்சிகளிலும் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் பற்றி விவாதித்தல், பொது நிதி செலவினம் மற்றும் சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது. கிராம பொதுமக்கள் இதில் பங்கேற்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் புதிய குடிநீர் ஆதாரங்களை உருவாக்குதல், பாரம்பரிய நீர்நிலைகளை புணரமைத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் குறித்து விவாதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.