இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, ஜனவரி 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். அதேபோல் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதியில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும். காலை வேலை லேசான அளவில் பனிமூட்டம் காணப்படும். மன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் ஜனவரி 20-ஆம் தேதி வடகிழக்கு திசையிலிருந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீச கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றார்கள்.