திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி 10-ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமிக்கு, திங்கள்கிழமை மாலை விடுதி வளாகத்திலேயே ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையின்படி, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த 15 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை மாலை அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, விடுதி வளாகத்திலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்துபோன பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக மாணவியையும் குழந்தையயையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது தாயும் சேயும் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் திடுக்கிடும் சம்பவம் குறித்து தகவலறிந்ததும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும் போலீசாரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் முறையான விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் கர்ப்பம் மற்றும் பிரசவம் குறித்த முழு விவரங்களையும் அதிகாரிகள் ரகசியமாகக் கையாண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அந்த மாணவி காதலித்து வந்ததாகவும், அதன் மூலமே அவர் கர்ப்பமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அந்த இளைஞர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தீவிர விசாரணை நடந்து வருகிறது. அரசுப் பள்ளி விடுதி வளாகத்திற்குள்ளேயே ஒரு மாணவி கர்ப்பமடைந்து குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
