கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி (29) என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் ஏராளமான இளம் பெண்களை குறி வைத்து அவர்களுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து பணம் பறித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்த நிலையில் அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிபிசிஐடிக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. அதன்பிறகு அவருக்கு உதவியாக இருந்த காசியின் தந்தை தங்கபாண்டியனை காவல்துறையினர் கைது செய்தனர். அதோடு அவருடைய நண்பர்களான டைசன் ஜினோ, தினேஷ் கௌதம் ஆகியோரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் ஜாமினில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கில் கடந்த வருடம் நாகர்கோவில் நீதிமன்றம் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் காசி மீது சிபிசிஐடி காவல்துறையினர் இதுவரை 7 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், ஒரு வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த வழக்கில் காசியின் நண்பர் ராஜேஷ் என்பவர் மீதும் பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் வெளிநாட்டில் தலைமறைவாகினார். இவர் 3 வருடங்களுக்குப் பிறகு நேற்று சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் காவல்துறையினர் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய நிலையில் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.