தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திருவிழாவின் சிறப்பாக இன்று மே ஐந்தாம் தேதி கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குவார். அதனைக் காண ஏராளமான பக்தர்கள் அன்றைய தினம் பரமக்குடி வட்டத்திற்கு வருகை தருவார்கள் என்பதால் பரமக்குடி வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 20 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு சார்நிலை கருவூலம் மற்றும் அரசு அலுவலகங்களும் அவசர அலுவல்கள் மட்டும் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதனைப்போலவே மதுரை கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த  மே 1ம் தேதிதொடங்கிய நிலையில் மே  9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் மே ஐந்தாம் தேதி நடைபெறும். இதனை பார்ப்பதற்காக பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் மதுரைக்கு வருவார்கள். அதனால் மதுரை மாவட்டத்திற்கும் இன்று உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.