
முதல் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையும், மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவு மூன்று மணியுடன் நிறைவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் விதிகள்: காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களை அளிக்கலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் சேர்த்து ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி. தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் இரண்டு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.