தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக சமீப காலமாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஜிபி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி ரேஷன் அரிசி கடைசல் பணிகளை தடுக்கும் விதமாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். அண்டை மாநிலங்களுக்கு ரயில்கள் மூலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தவிர்க்க ரயில் நிலையங்களில் முழுமையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.