
தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதர்வாடி வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களுக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அதில் சில வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தற்போது அரசு அனுப்பியுள்ளது. அதன்படி ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டாவது பிள்ளை முதலாவதாக பட்டப்படிப்பை முடித்தால் அந்த நபருக்கே முதல் தலைமுறை பட்டதாரி சான்று வழங்கி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இருவரும் ஒரே ஆண்டில் பட்டப்படிப்பை முடித்தால் பட்டப்படிப்பு முடித்த மாதத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும். முதலாவது நபர் முதல் தலைமுறை பட்டதாரி சான்று பெற்று வேலைவாய்ப்பை பெறுவதற்கு முன்பாக இறந்துவிட்டால் இரண்டாவது நபருக்கு வாய்ப்பு வழங்கப்படும். பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்டங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும் என அரசு தெரிவித்துள்ளது.